Tuesday, 12 November 2019

பாம்பாட்டி சித்தர் பகுதி - 5: குரு வணக்கம்

இந்த தொகுப்பில்,
    உண்மையான குருவிற்கான இலக்கணம், அவரின் வல்லமைகள் அவரை  எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை பற்றிி காணலாம்

          - சித்தர் சீடன்.

குரு வணக்கம்

10:

சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற வெங்கள் சற்கு ருவினைப்
போற்றி மனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்
புகர்ந்து புகழ்ந்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: விளம்பரத்திற்கு ஒப்பான உடல் பொருள் ஆன்மா இவை அனைத்தையும் நீர்கொடையாக வழங்கபடும் தானம் போலவே வாங்கி வந்திருக்கிறோம் எனும் உண்மையான ஞான ஆசிரியரை மனம் வாய் மொழி எண்ணம் மற்றும் உடலால் போற்றி புகழ்ந்து ஆடு பாம்பே.



11:

பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே.

பொருள்:பொய்யான மத அறிவினை ஊட்டி தூண்டிகை செய்யும் போலியான குருமார்கள் அல்லாது மனிதனை இயற்கை உணர்வுடன் கூடிய காரண அறிவை கூறி நல் வழியில் அழைத்து செல்வது மட்டுமே மதத்தின் கொள்கை என்றும், அதுவே உண்மையான இந்த மதம் என்றும் விருப்புடன் வெளிப்படையாக கூறும் ஒருவரே உண்மையான ஞான ஆசிரியர் ஆவார். அவரின் திருவடியை மட்டுமே பணிந்து ஆடு பாம்பே.

12:

வேதப்பொருளின்ன தென்று வேதங் கடந்த
மெய்ப்பொருளைக்கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரணசற் குருதாள்கண் டாடாய் பாம்பே.

பொருள்: சமய நூல்களின் பொருள் உண்மைத்தன்மையை இதுதான் என்று ஆழ சென்று அறிந்து உணர்ந்து உண்மை பொருளை கண்டறிந்து இதுதான் என உண்மை கருத்துகளை மனம் ஏற்று கொள்ளும் அளவாக கூறி கற்பிக்கும் முழுமையான ஒரு ஞான ஆசிரியரை கண்டால் அவரின் பாதம் பணிந்து ஞானம் அருள வணங்க வேண்டும்.




13:

உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: உள்ளங்கையில் உள்ள ஒரு பழத்தின் தூய்மை மற்றும் உண்மை தன்மை எவ்வாறு நமக்கு புலப்படுகிறதோ, அதுபோல உள் மனத்தின் உண்மை தன்மையை வெளிக்கொண்டு காட்ட கூடிய உண்மையான குரு கள்ள மனதுடன் அல்லாது கண்ணாற கண்டு மகிழ்ச்சி பெருக்குடன் ஆடு பாம்பே.

14:

அங்கையிற்கண் ணாடிபோல ஆதி வஸ்துவை
அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச்
சங்கையறச்சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படமெடுத் தாடாய் பாம்பே.

பொருள்: உள்ளங்கை கண்ணாடி போல மனதின் உண்மை தோற்றத்தை ஆதி வஸ்துவான இறைவனின் தன்மை காட்டும் குருவை எண்ணம் முதல் அனைத்துமாக எப்பொழுதும் அவருக்கு கீழ்படிந்து பணிவுடன் இருப்பதாக ஆடு பாம்பே.

15:

காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டுபின்
கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்காலமும் வாழும்
தூயநிலை கண்டபரி சுத்தக் குருவின்
துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே.

பொருள்: காயம் எனும் இந்த பூத உடல் அழிய கூடியது, என்று அறிந்து தியானத்தில் நிலைத்து எல்லா காலங்களிலும் வாழும் தூய பரிசுத்தமான நிலையை கண்ட உண்மையான குருவின் துணை வேண்டி வணங்கி ஆடு பாம்பே.

16:

கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கை யுடைய
குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: ஒரு உடலில் இருந்து மற்றோரு உடலுக்குள் ஆத்மாவை செலுத்துகின்ற கோட்பாடுகளும் உடைய குருவின் வல்லமையை சொல்லக்கூடிய ஒருவர், முத்தி நிலை பெறுவதற்கான வழியை மேலும் மேலும் காட்டும் ஒருவர் எவரோ அவரே உண்மையான குரு அவரை பணிந்து நின்று முத்தி நிலைக்கு வழி தேடி ஆடு பாம்பே.

17:

அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும்
அடக்கிய குளிகையோ டாடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே.

பொருள்: எட்டு திசைகளெங்கும் உடைய இந்த உலகத்தை மந்திர ஆற்றலுள்ள மாத்திரையை தங்களுக்குள் மறைத்து ஒடுக்கிக்கொண்டு உத்திராட நாள் பகலில் பன்னிரண்டு நாழிகைக்குமேல் வரும் இரண்டரை நாழிகை காலத்தில் சுற்றி வரக்கூடிய ஆற்றல் கொண்ட குருவின் பொன்மலர் பாதங்கள் அடைக்கலம் என்று உறுதியோடு பற்றுகொண்டு ஆடு பாம்பே.

18:

கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழுங் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே.

பொருள்: கற்பம் என்பது 432 கோடி ஆண்டுகளை கொண்ட பிரம்மனது ஒரு நாள் ஆகும். அவ்வாறான கற்ப காலத்திற்கும் அப்பாற்பட்டு அழிய கூடிய உடலுடன் அழியாமல் எந்த ஒரு பொருளுக்கும் செய்வினையாக உள்ள தொடக்கமான அந்த இறைபொருளோடு வாழும் குருவின் பொற் பாதம் தன்னை முழுமையான எண்ணத்தூய்மையும் சிந்தனையும் கொண்டு ஆடு பாம்பே.

19:

வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கோர் குறை வாய்த்தி டாது
மெச்சகட முள்ள வெங்கள் வேத குருவின்
மெல்லடி துதித்துநின் றாடாய்பாம்பே.

பொருள்: வைரமணியை போன்ற உறுதியான பொருளுக்கும் என்றாவது  ஒருநாள் குறை ஏற்படலாம் ஆனால் வச்சிரத்தை போன்ற உடலை உடைய மறைபொருளின் உண்மை ஆழம் அறிந்த குருவின் உடலானது என்றும் எந்த குறைக்கும் உட்படாத, இத்தகைய தேகத்தை உடைய உண்மையான குருவினை கண்டு வியந்து அவருடைய மென்மையான, இலேசான திருபாதங்களை துதித்து நின்று ஆடு பாம்பே.

Monday, 11 November 2019

பாம்பாட்டி சித்தர் பகுதி 4 - கடவுள் வணக்கம்

கடவுள் வணக்கம்
1:
தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே - சிவன்
சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே
ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே - சிவன்
அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே.

பொருள்:   கடவுள் சிவனுடைய பாதத்தை ஆராய்ந்து அறிந்து தெளிந்து கொண்டேன். அவருடைய திருவடியை தெரிந்து கொண்டேன் என்று ஆடு பாம்பே.

2:

நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றே
நித்திய மென்றே பெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதுமாதி பாத நினைந்தே
பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே.

பொருள்: தொடக்கமான அனைத்திற்கும் முதலான கடவுளின் திருவடியை மிக உழைத்தலாக நினைத்தால் அழிவற்ற இன்றியமையாத முத்தி என்ற நெடுங்காலம் நிலைத்திருக்கும் தெய்வபதவி நமக்கும் சொந்தமாகும்.

3:

பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே.

பொருள் : தங்கத்தில் எவ்வாறு ஒளி எங்கும் நிறைந்திருக்கிறதொ, பூவினால் பிணைக்கப்பட்ட மாலையில் எவ்வாறு மணம் எங்கும் உள்ளதோ, அவ்வாறே அனைத்து உயிர்களிலும் இறைவன் நிலை பெற்றிருக்கிறார். அவ்வாறு உள்ள வல்லலான அவரை வணங்கி நின்றிடல் வேண்டும்.

4:

எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்த
ஈசன் பதவாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கிய டங்கித்தெளிந் தாடு பாம்பே.

பொருள்: எள் முழுவதும் எண்ணெய் நிறைந்திருப்பது போல எல்லா உயிர்களிலும் இருந்து விளங்குகின்ற ஈசனின் பதத்தை எண்ணி (நினைத்து) பக்தி கலந்த அன்பில் ஓங்கி நின்று ஐம்புலன்களையும் ஒளித்து இறை நிலை நினைத்து ஆடு பாம்பே.

5:

அண்டபிண்டந் தந்த வெங்கள் ஆதிதேவனை
அகலாம மேலநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே.

பொருள்: அண்டம் என்ற இவ்வுலகத்தையும் பிண்டம் என்ற இவ்வுயிரையும் கொடுத்த முழு முதல் பொருளான அவரை அன்புடன் பணிந்து வணங்கி எட்டு திசைகளும் அறியும் வண்ணம் ஒருமனதாக புகழ்ந்து பாடி அவனை நாட்டு மனமே.


6:

சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத்
தொழுதழு தலற்றிற் தொந்தோந்தோ மெனவே
நீதிதவ றாவழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி யாடு பாம்பே.

பொருள்: ஒளி வடிவான மாசற்ற பரிசுத்தமான பொருளை நினைத்து நினைத்து  ஒழுக்க நெறி தவறாத வழியில் நிலையாக நின்று மாசற்று தாள ஒலி குறிப்பை போல தொழுது ஆட வேண்டும்.

7:

அருவாயும் உருவாயும் அந்தியாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்
திருவாயுங் குருவாயும் சீவனாயும்
செறிந்தவஸ் துவைப்போற்றி யாடு பாம்பே.

பொருள்: உருவமில்லாதவனாகவும் உருவம் உள்ளவனாகவும் அந்தி முதல் ஆறு காலங்களாகவும் முடிவதாகவும் சோதி ஒளியாகவும் உயிராகவும் செல்வம் சிறப்பு போன்ற கலை பொருளாகவும் இருக்கும் அவரை போற்றி வணங்க வேண்டும்.

8:

சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே.

பொருள்: குறிப்பிட்டு கூற இயலாத அழிவுக்கு வழிவகுக்கும் செய்கைகளை நுட்பமான அறிவால் அறிந்து பாவங்கள் அகல எட்டி பிடித்து விட்டோம் என்று ஆடு பாம்பே.

9:

எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.

பொருள்: எந்த உயிரானாலும், எந்த உலகானாலும் அதனை வெளி நின்று படைத்து உள்ளிருந்து ஆட்டுவித்து உலகாகவும் உயிராகவும் இருக்கும் அவனை கண்டு ஆனந்தமுடன் ஆடு பாம்பே.

Monday, 30 September 2019

பாம்பாட்டி சித்தர் பகுதி-3 பெண்ணாசை விலக்கல்

வாசகர்களுக்கு வணக்கம்,

இந்த பதிவில் சித்தர் பெருமான் பெண்ணாசை யை ஒழிக்க அல்லது வெறுக்க கூறிய வழி முறைகள் பற்றி பார்க்கலாம், மனித வாழ்க்கைையில் மனிதனை எளிதில் வசப்படுத்த கூடிய ஒன்று காமம்் என்றால் அது மிகை ஆகாது. எவன் ஒருவன்் இந்த காம பந்தத்தை அறுக்கின்றானோ ஞான இறைநிலையானது அவனுக்கு மிக எளிதானதாக ஆகிவிடுகிறதுு. காமம் என்பது ஒரு ஆணுக்கு பெண்ணின் மீது அல்லது பெண்ணிற்கு ஆணின்் மீதோ உள்ள உடல்் சார்ந்்த இச்சையை மட்டுமே குறிக்கிறது,  இவ்வாறான இச்சையைை மாற்றியமைக்க சித்ததர் பெருமாான் கூறிய வழி முறைகளை காணலாம்.

பிழைகள் ஏதும் இருப்பின் உள்ளீடுகள் வழங்கி பிழைகளைை திருத்த வாசகர்் பெருமக்கள் உதவியும், வலைதளத்திற்கு தங்களதுஆதரவையுும் வேண்டுகிறேன்,
நன்றி.          


                                        - சித்தர்் சீடன் .


பெண் ஆசை விலக்கல்
50:

வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே.

பொருள்: வெயில் பட்ட மஞ்சள் எவ்வாறு மிகுந்த ஒளியுடனும் மினுமினுப்புடனும் இருக்குமோ அது போன்றதாகிய மாதர்களின்(பெண்களின்) அழகிலும் அலங்கார தோற்றத்திலும் விருப்பப்பட்டு முந்தி கொண்டு சென்று அவர்களை அடையும் மாந்தர்கள்(மனிதர்கள்) அலங்காரத்தில் கவர்ந்திழுக்கப்பட்ட இலவுகாத் கிளியை போல் உடலின் புறத்தோற்ற அழகானது அகன்றவுடன் விட்டு செல்ல எண்ணுவர். என்று ஆடு பாம்பே.
51:
செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்
குண்டுகட் டெருமை யேறுங் கூற்றுப் பருந்தைக்
கொன்றுதின்று விட்டோமென் றாடாய் பாம்பே.

பொருள்: வண்டு போன்று கூறிய கண்களையும், பந்து போல் வட்டமான மார்பகங்களையும் கொண்ட பெண்ணை, சித்தம் எனும் ஞானத்தை அறிந்து வெறுத்து ஒதுக்கி, எருமை வாகனத்தில் ஏறி வரும் எமதர்மனையும் வெல்லும் வல்லமை பெறுவோம் ஞானத்தில் என்று ஆடு பாம்பே.

52:

வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்றுவமை வைத்துக் கூறுவார்
கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்
கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே.

பொருள்: வட்டமான உருளை வடிவிலான மார்பகங்கள் நாட்கள் செல்ல அவை வற்றி சுறுங்கி மெலிந்து வடிவிழந்து விடும் அதனை பெரிய மலைக்கு ஒப்பாக எண்ணி கூறாமல், துர் வாசனை உடைய யோனி எனும் கிணற்றில் வீழ்ந்து விடாதே, அப்படி வீழ்ந்து விட்டால் மறு படி எழுவது மிக கடினமானது என்று துணிவுடன் கூறி ஆடு பாம்பே.

53:

மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வார்மதி வன்மை யில்லாதார்
குருநலம் பேசுகின்ற கூகைமாந்தர்கள்
கும்பிக்கே இரையாவரென் றாடாய் பாம்பே.

பொருள்: அழிக்க படிந்த கண்களை கூறிய வாளுக்கு இணையாக பேசும் அறிவிழந்தவர்கள் இறுதியில் குல நலன்களை பற்றி பேசி கொண்டு நெருப்புக்கு அறையாக ஆவார்கள் அன்றி வேறு எதுவும் செய்ய முடியாதவர்கள் என்று ஆடு பாம்பே.

54:

சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார்
நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே.

பொருள்: சிக்கும் ஈறு, பேன் உடன் துர்நாற்றம் உடைய பெண்ணின் கூந்தலை கருமை நிற மேகத்திற்கு ஒப்பாகவும் , பெண்களின் கொங்கைகளை பொன்னிற்கு ஒப்பாகவும் கூறி விரும்பி உருகி நினைக்கும் மனிதர்கள் இறைவனை மனதுருக நினைப்பதில்லை என்று ஆடு பாம்பே.

55:

நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
கோனிலையை யறியாரென் றாடாய் பாம்பே.

பொருள்: துர் வாசனை உள்ள எச்சிலையும், சளி கொண்ட உடலையும் கூடிய பெண்ணை அமுதென்றும் தேனென்றும் கூறும் அறிவில்லாத ஆந்தை மனிதர்களால் இறைவன் நிலை என்ன என்பதை அறிய முடியாது என்று ஆடு பாம்பே.

56:

மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும்
மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்
ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே.

பொருள்: மயிலே, குயிலே மாணிக்கம் என்றும், மானே, தேனே அமுதே என்றும் தோகை வியர்த்து ஆடும் வண்ண மயிலுக்கு இணையான பெண்ணே என்றும் போற்றி கொண்டு இராமல், உண்மையான இறைநிலையை உணர்ந்து இவை அனைத்தும் மோகம் என்னும் சிற்றின்ப மாயை என்று வெறுத்து ஒதுக்கி ஆடு பாம்பே.

57:

மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்
மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்
கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே.

பொருள்: மின்னலை போன்ற மேகமும், ஒளி பொருந்திய கண்களை உடையவளே, மெல்லிடை உடையாளே, மேனகயை போல் அழகு நிறைந்தவளே, சீனி சர்க்கரை கட்டியே என்று பெண்ணை சூளுறைப்பதை விடுத்து அந்த மோக மாயயை நீக்கீனோம் என்று ஆடு பாம்பே.

58:

பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்
பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்
கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே.

பொருள்: பூவை போன்றவளே, அழகு உருவம் உடைய பொம்மையை போன்றவளே, தங்கமே, பொக்கிஷமே என்றும், கோவைப்பழம் போன்றவளே, முத்தே என்றும் கூறாமல் துறந்து விட்டோம் என்று ஆடு பாம்பே.

59:

மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.

பொருள்: உயிர்களின் உடல் என்பது திரட்சியான அழுக்கு நிறைந்த ஒன்றின் மீது பூசப்பட்ட மஞ்சள் என்றும், நிறைந்த புழு கூட்டின் மீது உள்ள வண்ணத்தை போன்றது என்றும், சிழ் நிறைந்த குழிக்குள் உள்ள சேற்றைப் போன்றது பெண் என்னும் மாயை என்றும் அறிந்து தள்ளி வைத்தும் என்று ஆடு பாம்பே.

குறிப்பு: இவை அனைத்தும் பெண்ணாசை என்னும்் காம இச்சையில்் இருந்துு விடுபட கூறப்பட்டது அன்றி மாதர்் தம்மை  இழிவு. படுத்த கூறப்பட்டது  அன்று மேலும் சித்தர்கள் என்றும் மாதர் தம்மை இழிவு படுத்தியதில்லை மாறாக போற்றவே செய்திருக்கிறார்கள். ஆகவே மேற்கூறிய அனைத்தும் ஆண் மற்றும் பெண் இருபாலரின் சரீர அமைப்புகளைப்பற்றியதும் உண்மைகளுும் தவிர உயிரின் உள்ளார்ந்த குண அமைப்புகளை பற்றியதுு அல்ல. நன்றி.

Friday, 27 September 2019

பாம்பாட்டி சித்தர் பகுதி - 2: பொருளாசை விலக்கல்

கடந்த பதிவில் சித்தர் பெருமான் பற்றியும் அவர் எழுதிய சதகம் பற்றியும் கூறினேன். இந்த பதிவில் பொருளாசை விலக்கல் பற்றி சித்தர் கூறிய தகவல்களை இயன்ற அளவு விளக்கி தொகுத்திருக்கிறேன் பிழை இருந்தால் பிழையை திருத்த உள்ளீடுகள்(comments) வழங்க கேட்டுு கொள்கிறேன். நன்றி.


                                         - சித்தர் சீடன்

பொருளாசை விலக்கல்



40:

நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: நாடு, மக்கள், மனை, சுற்றம் மற்றும் சேர்த்து வைத்த நல் பொருட்கள் என எவையும் அனைத்திற்கும் நடுநிலையான நடுவன்(எமதர்மன்) வரும் போது அருகில் கூட வருவதில்லையாம். அதுபோலவே உடலை விட்டு ஆத்மாவானது பிரிந்த அடுத்த நொடியில் இருந்து மேற்கூறிய எவற்றாலும் நமக்கு பயன் எதுவும் கிடையாது. இவ்வாறு நிலையானதல்லாத அவற்றை நினைத்து இருப்பதை காட்டிலும் நிலையான கூத்தன்(இறைவனின்) பதத்தை நினைத்து ஆடு வாய் பாம்பே.

41:

யானைசேனை தேர்ப்பரி யாவு மணியாய்
யமன்வரும் போதுதுணை யாமோ அறிவாய்
ஞானஞ்சற்று மில்லாத நாய்கட் குப்புத்தி
நாடிவரும் படிநீநின் றாடுபாம்பே.

பொருள்: யானை, குதிரை, தேர் மற்றும் காலாட்படை ஆகிய நான்கு விதமான படைகளானாலும் சரி, ஆடை அணிகலன்கள் ஆனாலும் சரி எமன் ஒருவன் வரும் வேளையில் இவை யாவும் துணையாக வருவதில்லை, மாறாக இறைவன் பால் நாம் கொண்ட பற்றும் மற்றும் செய்த அறங்களும் உள்ளார்ந்த ஞானமும் மட்டுமே இவ்வாறான காலங்களில் துணை வரும் என்று ஞானம் இல்லாது நாய்களுக்கு இருப்பது போல் அறிவிலிகளாக உள்ள மனிதர்களுக்கு நன்கு உணரும்படி கூறி இந்த ஞானத்தை நாடி வரும் படி ஆடு பாம்பே.

42:

மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்
மார்பிற்றொங்கும் பதக்கங்கண் மற்றும் பணிகள்
ஆணிப் பொன்முத் தாரமம் பொன் அந்தகடகம்
அழிவானபொருளெனநின் றாடாய் பாம்பே.

பொருள்: மாணிக்கம் பதித்த மணிமுடி, தோளணிகள், மார்பை காக்கும் பதக்கங்கள், பணியாட்கள், பொன் கொண்டு அலங்கரிக்கப்பட்ட முத்து மாலை மற்றும் அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய கை அணிகலன் ஆகிய இவை அனைத்தும் உயர்வானதாக தோன்றினாலும் உண்மையில் நிலை இல்லாமல் அழிய கூடியவைகளே என்று ஆடு பாம்பே.

43:

மாடகூடமாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றவந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே.

பொருள்: மாட மாளிகைகள் ஆகட்டும், வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களாகட்டும் அல்லது நாற்புறமும் பெரும் மதில்களால்(சுவர்கள்) சூழப்பட்ட அரண்மனை ஆகட்டும் இவை எவையும் இறுதி நேரத்தில் உடன் வருவதில்லை என்ற கொள்கையை நன்கு அறிந்தவர்கள் இவற்றோடு உறவாடாமல் வெறுத்து ஒதுக்குவார்கள் என்று ஆடு பாம்பே.

44:

மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்
அழியாரென் றேநீ துணிந் தாடாய் பாம்பே.

பொருள்: மலை அளவு தூய உயர்ந்த ரக பொன் வைத்திருந்தாலும் கூட இறக்கும் தருவாயில் அவற்றை எடுத்து செல்ல முடியாது, ஆனால் உண்மையான அகத்தூய்மையுடன்(மனம் மற்றும் எண்ணத்தில்) அத்தன்(இறைவன்) மீது அலைபாயாத நம்பிக்கை வைத்தவர்கள் என்றும் அழிவதும் இல்லை இறப்பை கண்டு அஞ்சுவதும் இல்லை என்று ஆடு பாம்பே.

45:

பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம் போய்சுடு நாறுமணங்கள்
வருமென்று தெளிந்துநின் றாடாய்பாம்பே.

பொருள்: பஞ்சால் செய்த மெத்தையோ, பூவால் ஆன மலர்ப்பள்ளியோ அல்லது மக்கள் படுத்துறங்கும் பாயோ இவை எதுவும் இடுகாட்டில் உள்ள உடலுக்கு பயன்படாது, அங்கு வாசம் மிகுந்த மஞ்சளின் மணம் கூட போய் இடுகாட்டில் சுட்டெரிக்க பட்ட உடல்களின் நாற்றம்(துர் வாசனை அல்லது கெட்ட மணம்) தவிர வேறோன்றும் இராது என்று தெளிந்து ஆடிடு பாம்பே.



46:

முக்கனியுஞ் சர்க்கரையும் மோத கங்களும்
முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி யுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே.

பொருள்: முக்கனிகள் ஆகிய மா, பலா, வாழை பக்குவமான சுவை உடைய மகிழ்ச்சி தரக்கூடிய பண்டங்கள் பதார்த்தங்கள் இவை மட்டுமே வாழ்நாள் முழுவதும் உண்டு வளர்த்த உடலாகவே ஆயினும் இறுதியில் உயிரானது உடலைவிட்டு பிரிந்தால் பூத உடலானது மண்ணால் விழுங்கப்படும் என்பதே நாம் காணும் உண்மை என்று அறிந்து உணர்ந்து இவற்றின் மீது உள்ள அதீத பற்றினை துறந்து ஆடு பாம்பே.

47:

வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்
வண்கவிகை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்
திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில்
சேரவர மாட்டாவென் றாடாய் பாம்பே.

பொருள்: வண்ண நிறங்களுடைய உயர்ந்த ரக பட்டானாலும் சரி, வாசனை உடன் கூடிய சட பொருளோ அல்லது உடலோ அழகு உருவமோ, இடுகாட்டிற்கு கொண்டு வரப்படும் குடை, விசிறி, மற்றும் முறம் உட்பட எந்த ஒரு பொருளும் நீ யமபுரி செல்லும் காலத்தில் உறுதியுடன் உன்னோடு சேர்ந்து வருவதில்லை என்று உணர்ந்து ஆடு பாம்பே.



48:


மக்கள்பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
மாளும்போது கூடவவர் மாள்வ தில்லையே
தக்கவுல கனைத்தையுந் தந்த கர்த்தனைத்
தாவித்தாவித் துதித்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: உற்றார் உறவினர்கள், மனைவியோ அல்லது பெற்றெடுத்த மக்களோ எவரும் நீ இறக்கும் தருவாயில் உனக்காக இறப்பதும் இல்லை உடன் வரப்போவதுமில்லை, எனவே இவ்வுலக பந்த பற்றுகளை விடுத்து எங்கும் எப்பொழுதும் துணையாக வரக்கூடிய இவ்வுலகங்கள் அனைத்தையும் படைத்து உயிர்களையும் உயிர்களுக்கு ஞானத்தையும் அருளிய நிலையான இறைவனை மட்டுமே வேண்டி போற்றி வணங்கி ஆடிடு பாம்பே.

49:

கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே.

பொருள்: கோடையில் தரையில் இருக்கும் கானல் நீரை உண்மையில் நீர் என்று அருகில் சென்று பார்த்து திரும்பும் மானைப்போலவே புவியில் வாழும் மானிடர்கள் நிலையற்ற அசையும், அசையா பொருட்கள் மீது பற்று கொண்டு அவையே மகிழ்ச்சியை தரவல்லது என்று எண்ணி சிற்றின்பம் கொண்டு அவற்றிற்காக விண்வாதங்களும் கலகங்களும் செய்கின்றனர். ஆனால் உண்மையில் இவை எதுவும் இறைவனின் அருளிற்கும் ஞானத்திற்கும் இணையாகது என்றும் அதுவே மெய்யான தும் நிரந்தரமானது என்றும் அதனை கண்டறிந்தவர்கள் கூறுவார்கள் மேலும் நிலையற்ற அவற்றிற்காக வீண் விவாதமோ கலகமோ செய்யாமல் இறைவன் அடிமலர் ஒன்றே நிரந்தரம் என்று அவனையே நாடுவார்கள் என்று ஆடு பாம்பே.


           

பாம்பாட்டி சித்தர் பகுதி-1

பாம்பாட்டி சித்தர்


     இவர் சட்டை முனி யின் சீடராக கருதப்படுகிறார்், சட்டைை முனியின் தூண்டுதலின் பேரிலேயே இவர் உலக மாயையில் இருந்து சித்த சன்மார்கத்தை வழியைை அடைந்தார் என்று போகர் கூறுகிறார். 

    அஷ்ட்ட சித்திகளை் பெற்ற பின்பு இறந்த ஒரு குறுநில மன்னனின் உடலினுள் சென்று அம்மன்னனின் ஆத்மாவை பரகாய பிரவேசமுறையில் பாம்புு ஒன்றினுள் இருக்க செய்ததால். 
பாம்பாக மாறிய அந்த அரசன் தனது ஆசைகள் பூர்த்தி அடையாதவனாக அங்கும் இங்கும் திரிய சித்தர் பெருமான் இவ்வுலக மாயை பற்றி தெளிவான பொருளுடன் 129 பாடல்கள் அடங்கிய சதகத்தை பாடினார்.

அந்த சதகம் ஆனது

1. கடவுுள் வணக்கம்
2.குருவணக்கம்
3.பாம்பின் சிறப்பு
4.சித்தர் வல்லபம்
5.சித்தர் சம்வாதம்
6.பொருள் ஆசைை விலக்கல்
7.பெண்ணாசை விலக்கல்
8.அகப்பற்று நீக்குதல்
ஆகிய 8 தலைப்புுகளில் உள்ளடக்கியது.

இவற்றில் பாம்பை கொண்டு மனத்தை உருவகபடுத்தி இரண்டையும் ஒருங்கே சேரும்் வண்ணம் பாடல்களை பாடியுள்ளார்் சித்தர் பெருமான். ஆகவே பாம்பைை உவமையாக கொண்டு் மனதை வரு்ணித்து விளக்கியிருக்கிறார் பாம்பாட்டி சித்தர் பெருமான்.

பாடல்களும் விளக்கங்களும் பின்வரும் பதிவுகளில்் தொகுத்திருக்கிறேன் பிழைகள் இருந்தால் தவறை திருத்தி கொள்ள உள்ளீடுகள் (comments) வழங்க கேட்டுு கொள்கிறேன்.


                                   - சித்தர் சீடன். 

வலைதளம்

வலை பதிவு பற்றி.....

       எனக்கு தெரிந்த அளவு சித்தர்கள் பற்றியும், அவர்களது பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள், ஆன்மீக தொகுப்புகள் ஆகியவற்றை இயன்ற அளவு பதிவிட  உள்ளேன்், பிழைகள் ஏதும் இருக்குமாயின் பிழைகளை திருத்த ஆன்மீக பெரியோர்கள் உள்ளீடுகள்(comments) வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்...



                      -  சித்தர் சீடன்்.