1:
தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே - சிவன்
சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே
ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே - சிவன்
அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே.
பொருள்: கடவுள் சிவனுடைய பாதத்தை ஆராய்ந்து அறிந்து தெளிந்து கொண்டேன். அவருடைய திருவடியை தெரிந்து கொண்டேன் என்று ஆடு பாம்பே.
2:
நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றே
நித்திய மென்றே பெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதுமாதி பாத நினைந்தே
பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே.
பொருள்: தொடக்கமான அனைத்திற்கும் முதலான கடவுளின் திருவடியை மிக உழைத்தலாக நினைத்தால் அழிவற்ற இன்றியமையாத முத்தி என்ற நெடுங்காலம் நிலைத்திருக்கும் தெய்வபதவி நமக்கும் சொந்தமாகும்.
3:
பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே.
பொருள் : தங்கத்தில் எவ்வாறு ஒளி எங்கும் நிறைந்திருக்கிறதொ, பூவினால் பிணைக்கப்பட்ட மாலையில் எவ்வாறு மணம் எங்கும் உள்ளதோ, அவ்வாறே அனைத்து உயிர்களிலும் இறைவன் நிலை பெற்றிருக்கிறார். அவ்வாறு உள்ள வல்லலான அவரை வணங்கி நின்றிடல் வேண்டும்.
4:
எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்த
ஈசன் பதவாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கிய டங்கித்தெளிந் தாடு பாம்பே.
பொருள்: எள் முழுவதும் எண்ணெய் நிறைந்திருப்பது போல எல்லா உயிர்களிலும் இருந்து விளங்குகின்ற ஈசனின் பதத்தை எண்ணி (நினைத்து) பக்தி கலந்த அன்பில் ஓங்கி நின்று ஐம்புலன்களையும் ஒளித்து இறை நிலை நினைத்து ஆடு பாம்பே.
5:
அண்டபிண்டந் தந்த வெங்கள் ஆதிதேவனை
அகலாம மேலநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே.
பொருள்: அண்டம் என்ற இவ்வுலகத்தையும் பிண்டம் என்ற இவ்வுயிரையும் கொடுத்த முழு முதல் பொருளான அவரை அன்புடன் பணிந்து வணங்கி எட்டு திசைகளும் அறியும் வண்ணம் ஒருமனதாக புகழ்ந்து பாடி அவனை நாட்டு மனமே.
6:
சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத்
தொழுதழு தலற்றிற் தொந்தோந்தோ மெனவே
நீதிதவ றாவழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி யாடு பாம்பே.
பொருள்: ஒளி வடிவான மாசற்ற பரிசுத்தமான பொருளை நினைத்து நினைத்து ஒழுக்க நெறி தவறாத வழியில் நிலையாக நின்று மாசற்று தாள ஒலி குறிப்பை போல தொழுது ஆட வேண்டும்.
7:
அருவாயும் உருவாயும் அந்தியாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்
திருவாயுங் குருவாயும் சீவனாயும்
செறிந்தவஸ் துவைப்போற்றி யாடு பாம்பே.
பொருள்: உருவமில்லாதவனாகவும் உருவம் உள்ளவனாகவும் அந்தி முதல் ஆறு காலங்களாகவும் முடிவதாகவும் சோதி ஒளியாகவும் உயிராகவும் செல்வம் சிறப்பு போன்ற கலை பொருளாகவும் இருக்கும் அவரை போற்றி வணங்க வேண்டும்.
8:
சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே.
பொருள்: குறிப்பிட்டு கூற இயலாத அழிவுக்கு வழிவகுக்கும் செய்கைகளை நுட்பமான அறிவால் அறிந்து பாவங்கள் அகல எட்டி பிடித்து விட்டோம் என்று ஆடு பாம்பே.
9:
எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.
பொருள்: எந்த உயிரானாலும், எந்த உலகானாலும் அதனை வெளி நின்று படைத்து உள்ளிருந்து ஆட்டுவித்து உலகாகவும் உயிராகவும் இருக்கும் அவனை கண்டு ஆனந்தமுடன் ஆடு பாம்பே.
No comments:
Post a Comment