Friday, 27 September 2019

பாம்பாட்டி சித்தர் பகுதி - 2: பொருளாசை விலக்கல்

கடந்த பதிவில் சித்தர் பெருமான் பற்றியும் அவர் எழுதிய சதகம் பற்றியும் கூறினேன். இந்த பதிவில் பொருளாசை விலக்கல் பற்றி சித்தர் கூறிய தகவல்களை இயன்ற அளவு விளக்கி தொகுத்திருக்கிறேன் பிழை இருந்தால் பிழையை திருத்த உள்ளீடுகள்(comments) வழங்க கேட்டுு கொள்கிறேன். நன்றி.


                                         - சித்தர் சீடன்

பொருளாசை விலக்கல்



40:

நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: நாடு, மக்கள், மனை, சுற்றம் மற்றும் சேர்த்து வைத்த நல் பொருட்கள் என எவையும் அனைத்திற்கும் நடுநிலையான நடுவன்(எமதர்மன்) வரும் போது அருகில் கூட வருவதில்லையாம். அதுபோலவே உடலை விட்டு ஆத்மாவானது பிரிந்த அடுத்த நொடியில் இருந்து மேற்கூறிய எவற்றாலும் நமக்கு பயன் எதுவும் கிடையாது. இவ்வாறு நிலையானதல்லாத அவற்றை நினைத்து இருப்பதை காட்டிலும் நிலையான கூத்தன்(இறைவனின்) பதத்தை நினைத்து ஆடு வாய் பாம்பே.

41:

யானைசேனை தேர்ப்பரி யாவு மணியாய்
யமன்வரும் போதுதுணை யாமோ அறிவாய்
ஞானஞ்சற்று மில்லாத நாய்கட் குப்புத்தி
நாடிவரும் படிநீநின் றாடுபாம்பே.

பொருள்: யானை, குதிரை, தேர் மற்றும் காலாட்படை ஆகிய நான்கு விதமான படைகளானாலும் சரி, ஆடை அணிகலன்கள் ஆனாலும் சரி எமன் ஒருவன் வரும் வேளையில் இவை யாவும் துணையாக வருவதில்லை, மாறாக இறைவன் பால் நாம் கொண்ட பற்றும் மற்றும் செய்த அறங்களும் உள்ளார்ந்த ஞானமும் மட்டுமே இவ்வாறான காலங்களில் துணை வரும் என்று ஞானம் இல்லாது நாய்களுக்கு இருப்பது போல் அறிவிலிகளாக உள்ள மனிதர்களுக்கு நன்கு உணரும்படி கூறி இந்த ஞானத்தை நாடி வரும் படி ஆடு பாம்பே.

42:

மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்
மார்பிற்றொங்கும் பதக்கங்கண் மற்றும் பணிகள்
ஆணிப் பொன்முத் தாரமம் பொன் அந்தகடகம்
அழிவானபொருளெனநின் றாடாய் பாம்பே.

பொருள்: மாணிக்கம் பதித்த மணிமுடி, தோளணிகள், மார்பை காக்கும் பதக்கங்கள், பணியாட்கள், பொன் கொண்டு அலங்கரிக்கப்பட்ட முத்து மாலை மற்றும் அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய கை அணிகலன் ஆகிய இவை அனைத்தும் உயர்வானதாக தோன்றினாலும் உண்மையில் நிலை இல்லாமல் அழிய கூடியவைகளே என்று ஆடு பாம்பே.

43:

மாடகூடமாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றவந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே.

பொருள்: மாட மாளிகைகள் ஆகட்டும், வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களாகட்டும் அல்லது நாற்புறமும் பெரும் மதில்களால்(சுவர்கள்) சூழப்பட்ட அரண்மனை ஆகட்டும் இவை எவையும் இறுதி நேரத்தில் உடன் வருவதில்லை என்ற கொள்கையை நன்கு அறிந்தவர்கள் இவற்றோடு உறவாடாமல் வெறுத்து ஒதுக்குவார்கள் என்று ஆடு பாம்பே.

44:

மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்
அழியாரென் றேநீ துணிந் தாடாய் பாம்பே.

பொருள்: மலை அளவு தூய உயர்ந்த ரக பொன் வைத்திருந்தாலும் கூட இறக்கும் தருவாயில் அவற்றை எடுத்து செல்ல முடியாது, ஆனால் உண்மையான அகத்தூய்மையுடன்(மனம் மற்றும் எண்ணத்தில்) அத்தன்(இறைவன்) மீது அலைபாயாத நம்பிக்கை வைத்தவர்கள் என்றும் அழிவதும் இல்லை இறப்பை கண்டு அஞ்சுவதும் இல்லை என்று ஆடு பாம்பே.

45:

பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம் போய்சுடு நாறுமணங்கள்
வருமென்று தெளிந்துநின் றாடாய்பாம்பே.

பொருள்: பஞ்சால் செய்த மெத்தையோ, பூவால் ஆன மலர்ப்பள்ளியோ அல்லது மக்கள் படுத்துறங்கும் பாயோ இவை எதுவும் இடுகாட்டில் உள்ள உடலுக்கு பயன்படாது, அங்கு வாசம் மிகுந்த மஞ்சளின் மணம் கூட போய் இடுகாட்டில் சுட்டெரிக்க பட்ட உடல்களின் நாற்றம்(துர் வாசனை அல்லது கெட்ட மணம்) தவிர வேறோன்றும் இராது என்று தெளிந்து ஆடிடு பாம்பே.



46:

முக்கனியுஞ் சர்க்கரையும் மோத கங்களும்
முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி யுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே.

பொருள்: முக்கனிகள் ஆகிய மா, பலா, வாழை பக்குவமான சுவை உடைய மகிழ்ச்சி தரக்கூடிய பண்டங்கள் பதார்த்தங்கள் இவை மட்டுமே வாழ்நாள் முழுவதும் உண்டு வளர்த்த உடலாகவே ஆயினும் இறுதியில் உயிரானது உடலைவிட்டு பிரிந்தால் பூத உடலானது மண்ணால் விழுங்கப்படும் என்பதே நாம் காணும் உண்மை என்று அறிந்து உணர்ந்து இவற்றின் மீது உள்ள அதீத பற்றினை துறந்து ஆடு பாம்பே.

47:

வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்
வண்கவிகை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்
திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில்
சேரவர மாட்டாவென் றாடாய் பாம்பே.

பொருள்: வண்ண நிறங்களுடைய உயர்ந்த ரக பட்டானாலும் சரி, வாசனை உடன் கூடிய சட பொருளோ அல்லது உடலோ அழகு உருவமோ, இடுகாட்டிற்கு கொண்டு வரப்படும் குடை, விசிறி, மற்றும் முறம் உட்பட எந்த ஒரு பொருளும் நீ யமபுரி செல்லும் காலத்தில் உறுதியுடன் உன்னோடு சேர்ந்து வருவதில்லை என்று உணர்ந்து ஆடு பாம்பே.



48:


மக்கள்பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
மாளும்போது கூடவவர் மாள்வ தில்லையே
தக்கவுல கனைத்தையுந் தந்த கர்த்தனைத்
தாவித்தாவித் துதித்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: உற்றார் உறவினர்கள், மனைவியோ அல்லது பெற்றெடுத்த மக்களோ எவரும் நீ இறக்கும் தருவாயில் உனக்காக இறப்பதும் இல்லை உடன் வரப்போவதுமில்லை, எனவே இவ்வுலக பந்த பற்றுகளை விடுத்து எங்கும் எப்பொழுதும் துணையாக வரக்கூடிய இவ்வுலகங்கள் அனைத்தையும் படைத்து உயிர்களையும் உயிர்களுக்கு ஞானத்தையும் அருளிய நிலையான இறைவனை மட்டுமே வேண்டி போற்றி வணங்கி ஆடிடு பாம்பே.

49:

கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே.

பொருள்: கோடையில் தரையில் இருக்கும் கானல் நீரை உண்மையில் நீர் என்று அருகில் சென்று பார்த்து திரும்பும் மானைப்போலவே புவியில் வாழும் மானிடர்கள் நிலையற்ற அசையும், அசையா பொருட்கள் மீது பற்று கொண்டு அவையே மகிழ்ச்சியை தரவல்லது என்று எண்ணி சிற்றின்பம் கொண்டு அவற்றிற்காக விண்வாதங்களும் கலகங்களும் செய்கின்றனர். ஆனால் உண்மையில் இவை எதுவும் இறைவனின் அருளிற்கும் ஞானத்திற்கும் இணையாகது என்றும் அதுவே மெய்யான தும் நிரந்தரமானது என்றும் அதனை கண்டறிந்தவர்கள் கூறுவார்கள் மேலும் நிலையற்ற அவற்றிற்காக வீண் விவாதமோ கலகமோ செய்யாமல் இறைவன் அடிமலர் ஒன்றே நிரந்தரம் என்று அவனையே நாடுவார்கள் என்று ஆடு பாம்பே.


           

1 comment:

  1. useful.thank very much its my son"s portion
    continous your great jobs congratulation

    ReplyDelete