Tuesday, 12 November 2019

பாம்பாட்டி சித்தர் பகுதி - 5: குரு வணக்கம்

இந்த தொகுப்பில்,
    உண்மையான குருவிற்கான இலக்கணம், அவரின் வல்லமைகள் அவரை  எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை பற்றிி காணலாம்

          - சித்தர் சீடன்.

குரு வணக்கம்

10:

சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற வெங்கள் சற்கு ருவினைப்
போற்றி மனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்
புகர்ந்து புகழ்ந்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: விளம்பரத்திற்கு ஒப்பான உடல் பொருள் ஆன்மா இவை அனைத்தையும் நீர்கொடையாக வழங்கபடும் தானம் போலவே வாங்கி வந்திருக்கிறோம் எனும் உண்மையான ஞான ஆசிரியரை மனம் வாய் மொழி எண்ணம் மற்றும் உடலால் போற்றி புகழ்ந்து ஆடு பாம்பே.



11:

பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே.

பொருள்:பொய்யான மத அறிவினை ஊட்டி தூண்டிகை செய்யும் போலியான குருமார்கள் அல்லாது மனிதனை இயற்கை உணர்வுடன் கூடிய காரண அறிவை கூறி நல் வழியில் அழைத்து செல்வது மட்டுமே மதத்தின் கொள்கை என்றும், அதுவே உண்மையான இந்த மதம் என்றும் விருப்புடன் வெளிப்படையாக கூறும் ஒருவரே உண்மையான ஞான ஆசிரியர் ஆவார். அவரின் திருவடியை மட்டுமே பணிந்து ஆடு பாம்பே.

12:

வேதப்பொருளின்ன தென்று வேதங் கடந்த
மெய்ப்பொருளைக்கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரணசற் குருதாள்கண் டாடாய் பாம்பே.

பொருள்: சமய நூல்களின் பொருள் உண்மைத்தன்மையை இதுதான் என்று ஆழ சென்று அறிந்து உணர்ந்து உண்மை பொருளை கண்டறிந்து இதுதான் என உண்மை கருத்துகளை மனம் ஏற்று கொள்ளும் அளவாக கூறி கற்பிக்கும் முழுமையான ஒரு ஞான ஆசிரியரை கண்டால் அவரின் பாதம் பணிந்து ஞானம் அருள வணங்க வேண்டும்.




13:

உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: உள்ளங்கையில் உள்ள ஒரு பழத்தின் தூய்மை மற்றும் உண்மை தன்மை எவ்வாறு நமக்கு புலப்படுகிறதோ, அதுபோல உள் மனத்தின் உண்மை தன்மையை வெளிக்கொண்டு காட்ட கூடிய உண்மையான குரு கள்ள மனதுடன் அல்லாது கண்ணாற கண்டு மகிழ்ச்சி பெருக்குடன் ஆடு பாம்பே.

14:

அங்கையிற்கண் ணாடிபோல ஆதி வஸ்துவை
அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச்
சங்கையறச்சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படமெடுத் தாடாய் பாம்பே.

பொருள்: உள்ளங்கை கண்ணாடி போல மனதின் உண்மை தோற்றத்தை ஆதி வஸ்துவான இறைவனின் தன்மை காட்டும் குருவை எண்ணம் முதல் அனைத்துமாக எப்பொழுதும் அவருக்கு கீழ்படிந்து பணிவுடன் இருப்பதாக ஆடு பாம்பே.

15:

காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டுபின்
கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்காலமும் வாழும்
தூயநிலை கண்டபரி சுத்தக் குருவின்
துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே.

பொருள்: காயம் எனும் இந்த பூத உடல் அழிய கூடியது, என்று அறிந்து தியானத்தில் நிலைத்து எல்லா காலங்களிலும் வாழும் தூய பரிசுத்தமான நிலையை கண்ட உண்மையான குருவின் துணை வேண்டி வணங்கி ஆடு பாம்பே.

16:

கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கை யுடைய
குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே.

பொருள்: ஒரு உடலில் இருந்து மற்றோரு உடலுக்குள் ஆத்மாவை செலுத்துகின்ற கோட்பாடுகளும் உடைய குருவின் வல்லமையை சொல்லக்கூடிய ஒருவர், முத்தி நிலை பெறுவதற்கான வழியை மேலும் மேலும் காட்டும் ஒருவர் எவரோ அவரே உண்மையான குரு அவரை பணிந்து நின்று முத்தி நிலைக்கு வழி தேடி ஆடு பாம்பே.

17:

அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும்
அடக்கிய குளிகையோ டாடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே.

பொருள்: எட்டு திசைகளெங்கும் உடைய இந்த உலகத்தை மந்திர ஆற்றலுள்ள மாத்திரையை தங்களுக்குள் மறைத்து ஒடுக்கிக்கொண்டு உத்திராட நாள் பகலில் பன்னிரண்டு நாழிகைக்குமேல் வரும் இரண்டரை நாழிகை காலத்தில் சுற்றி வரக்கூடிய ஆற்றல் கொண்ட குருவின் பொன்மலர் பாதங்கள் அடைக்கலம் என்று உறுதியோடு பற்றுகொண்டு ஆடு பாம்பே.

18:

கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழுங் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே.

பொருள்: கற்பம் என்பது 432 கோடி ஆண்டுகளை கொண்ட பிரம்மனது ஒரு நாள் ஆகும். அவ்வாறான கற்ப காலத்திற்கும் அப்பாற்பட்டு அழிய கூடிய உடலுடன் அழியாமல் எந்த ஒரு பொருளுக்கும் செய்வினையாக உள்ள தொடக்கமான அந்த இறைபொருளோடு வாழும் குருவின் பொற் பாதம் தன்னை முழுமையான எண்ணத்தூய்மையும் சிந்தனையும் கொண்டு ஆடு பாம்பே.

19:

வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கோர் குறை வாய்த்தி டாது
மெச்சகட முள்ள வெங்கள் வேத குருவின்
மெல்லடி துதித்துநின் றாடாய்பாம்பே.

பொருள்: வைரமணியை போன்ற உறுதியான பொருளுக்கும் என்றாவது  ஒருநாள் குறை ஏற்படலாம் ஆனால் வச்சிரத்தை போன்ற உடலை உடைய மறைபொருளின் உண்மை ஆழம் அறிந்த குருவின் உடலானது என்றும் எந்த குறைக்கும் உட்படாத, இத்தகைய தேகத்தை உடைய உண்மையான குருவினை கண்டு வியந்து அவருடைய மென்மையான, இலேசான திருபாதங்களை துதித்து நின்று ஆடு பாம்பே.

Monday, 11 November 2019

பாம்பாட்டி சித்தர் பகுதி 4 - கடவுள் வணக்கம்

கடவுள் வணக்கம்
1:
தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே - சிவன்
சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே
ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே - சிவன்
அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே.

பொருள்:   கடவுள் சிவனுடைய பாதத்தை ஆராய்ந்து அறிந்து தெளிந்து கொண்டேன். அவருடைய திருவடியை தெரிந்து கொண்டேன் என்று ஆடு பாம்பே.

2:

நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றே
நித்திய மென்றே பெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதுமாதி பாத நினைந்தே
பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே.

பொருள்: தொடக்கமான அனைத்திற்கும் முதலான கடவுளின் திருவடியை மிக உழைத்தலாக நினைத்தால் அழிவற்ற இன்றியமையாத முத்தி என்ற நெடுங்காலம் நிலைத்திருக்கும் தெய்வபதவி நமக்கும் சொந்தமாகும்.

3:

பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே.

பொருள் : தங்கத்தில் எவ்வாறு ஒளி எங்கும் நிறைந்திருக்கிறதொ, பூவினால் பிணைக்கப்பட்ட மாலையில் எவ்வாறு மணம் எங்கும் உள்ளதோ, அவ்வாறே அனைத்து உயிர்களிலும் இறைவன் நிலை பெற்றிருக்கிறார். அவ்வாறு உள்ள வல்லலான அவரை வணங்கி நின்றிடல் வேண்டும்.

4:

எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்த
ஈசன் பதவாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கிய டங்கித்தெளிந் தாடு பாம்பே.

பொருள்: எள் முழுவதும் எண்ணெய் நிறைந்திருப்பது போல எல்லா உயிர்களிலும் இருந்து விளங்குகின்ற ஈசனின் பதத்தை எண்ணி (நினைத்து) பக்தி கலந்த அன்பில் ஓங்கி நின்று ஐம்புலன்களையும் ஒளித்து இறை நிலை நினைத்து ஆடு பாம்பே.

5:

அண்டபிண்டந் தந்த வெங்கள் ஆதிதேவனை
அகலாம மேலநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே.

பொருள்: அண்டம் என்ற இவ்வுலகத்தையும் பிண்டம் என்ற இவ்வுயிரையும் கொடுத்த முழு முதல் பொருளான அவரை அன்புடன் பணிந்து வணங்கி எட்டு திசைகளும் அறியும் வண்ணம் ஒருமனதாக புகழ்ந்து பாடி அவனை நாட்டு மனமே.


6:

சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத்
தொழுதழு தலற்றிற் தொந்தோந்தோ மெனவே
நீதிதவ றாவழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி யாடு பாம்பே.

பொருள்: ஒளி வடிவான மாசற்ற பரிசுத்தமான பொருளை நினைத்து நினைத்து  ஒழுக்க நெறி தவறாத வழியில் நிலையாக நின்று மாசற்று தாள ஒலி குறிப்பை போல தொழுது ஆட வேண்டும்.

7:

அருவாயும் உருவாயும் அந்தியாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்
திருவாயுங் குருவாயும் சீவனாயும்
செறிந்தவஸ் துவைப்போற்றி யாடு பாம்பே.

பொருள்: உருவமில்லாதவனாகவும் உருவம் உள்ளவனாகவும் அந்தி முதல் ஆறு காலங்களாகவும் முடிவதாகவும் சோதி ஒளியாகவும் உயிராகவும் செல்வம் சிறப்பு போன்ற கலை பொருளாகவும் இருக்கும் அவரை போற்றி வணங்க வேண்டும்.

8:

சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே.

பொருள்: குறிப்பிட்டு கூற இயலாத அழிவுக்கு வழிவகுக்கும் செய்கைகளை நுட்பமான அறிவால் அறிந்து பாவங்கள் அகல எட்டி பிடித்து விட்டோம் என்று ஆடு பாம்பே.

9:

எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.

பொருள்: எந்த உயிரானாலும், எந்த உலகானாலும் அதனை வெளி நின்று படைத்து உள்ளிருந்து ஆட்டுவித்து உலகாகவும் உயிராகவும் இருக்கும் அவனை கண்டு ஆனந்தமுடன் ஆடு பாம்பே.